Saturday, January 27, 2007

நகுலன் படைப்புலகம் - சங்கர ராம சுப்ரமணியன் (Nagulan - Thinnai)

Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60212212&format=html&edition_id=20021221

நகுலன் படைப்புலகம்

சங்கர ராம சுப்ரமணியன்

(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் தொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங்கனவை அனுபவமாக்குபவர் என்பது தான் அது. படிக்கும்போது விலகிப் படிக்க முடியவில்லை. பயம் கவிழ்த்துவிடும். பயம், பயம் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரபஞ்சனின் கதையில் வரும் நல்லியல்பு கொண்ட இளைஞனாக என்னை விரும்பிக் கொண்டிருந்தேன். ஜே.ஜே. படித்த பிறகு கூடுதல் நெஞ்சு நிமிர்த்தல். இந்த தருணத்தில் நகுலன் என் மன அடுக்குக்குள் புகுந்துவிட்டார். அவரை எப்படி வகைப்படுத்துவது. அவசியமில்லாத விருந்தாளியாய் - ஆனால் நான் அழைத்து வந்த விருந்தாளி அல்லவா -- அவரை வீட்டின் புழக்கடையில் அமரும்படி செய்துவிட்டு தப்பித்து என் இலக்கிய பயணத்தை லயம் குலையாமல் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

அதற்குபின் வந்த வசந்தங்களும், கோடைகளும், என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன

என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது. கோடைகளும், வசந்தங்களும் என் உடலில் உருவாக்கிய தோல்வி உறுப்புதான் புழக்கடையில் மறைந்திருக்கும் நகுலனிடம் என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செத்தைகள் குவிந்து, பிரமைகளை தோற்றுவிக்கும் திருநெல்வேலி வெயில் நகுலனுடைய கவிதைகளை வாசிக்க வைத்தது.

ஆசை, ஆசையின்மை - வெற்றி, தோல்வி - இருப்பு, இன்மை - மாறி, மாறி உரையாடிக் கொண்டிருக்கும் மனித மனத்திற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடிபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளில் சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. அது மிகுந்த அழகுடையது. நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.

வீட்டின் கூரையில் காகங்கள் கரைந்தால் விருந்தாளி வருவார்கள் என்பது நமது ஊர்களில் உள்ள நம்பிக்கை. ஊர் தொடர்பான கவனிப்பாய் இருக்கும். அந்த ஊரில் நிறைய பெண்கள் சைக்கிளில் போய் கொண்டிருப்பார்கள். ஊர் பற்றி எந்த ஒட்டுதலும் விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு நகுலனின் ஜன்னலில் இருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது. இந்தபார்வைதான் நிறுவப்பட்ட கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்கு காரணம். சமூகம் தான் உருவாக்கியுள்ள தளைகளை எழுத்தாளன் மீறும்போது அது முதலில் தன் எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னை போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதான பாவனை செய்துகொண்டு - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விதிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், ரகசியக் கனவுகளின் மீது கட்டப்பட்டது தானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி ரகசியத் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும் மரணமும் பெற்ற தருணம் அது. நகுலனும் எழுத்தின் விசார மரபிலும் மரபான சத்த ஒழுங்கிலும் தான் தன் கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். குருவாயூர் குருவி வருகிறது.

பிரெக்டுக்கு எதிர்வினை புரியும் விதமாகத்தான் நகுலன் முதலில் தன் அ-கவிதைப் பாதையை தொடங்குகிறார். ஏன் மரங்களைப் பற்றி பேசக் கூடாதென்று. பிறகு எழுதும் கவிதைகளில் குருவாயூர் குருவி இல்லை. அப்போது அவர் பார்வையில் படும்பொருள்கள் நிழலோடு சேர்ந்து நகுலனின் வெளிக்குள் புகுந்து விடுகின்றன.

* * * *

நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ பிற புனைவுகளிலோ தமிழில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதைமாந்தர் உருவாக்கம் கிடையாது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் முயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில் ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஒரு காட்சி அல்லது அனுபவத்தை வைத்து நடக்கப்போகும் விஷயங்களுக்கான சமிக்ஞையை பெறுவது போலத்தான். நகுலனின் எழுத்துக்களையும் அவர் விவரிக்கும் காட்சிகளையும் சில சகுனங்களாகத் தான் புரிந்து கொள்கிறேன். ஒரு தோல்வியுற்ற மனம் தெரிவிக்கும் நவீன சகுனங்கள் தான் அவை.

* * *

நிகழ் வாழ்க்கையை விசாரம் செய்து ஒரு தத்துவசரடில் எழுதிச் செல்வதாகத்தான் தமிழில் நவீன கவிதை வெளிப்படத் தொடங்குகிறது. மரபின் செழுமையை சாதகமாக்கிக் கொண்டு படிமங்களின் வழியான சமத்கார கவிதைகளை பிரமிள் எழுதத் தொடங்கும் போது நவீன கவிதையில் பெரும் உடைப்பு ஒன்று நிகழ்கிறது. நவீன கவிதை புனைவின் சாயல்களை ஒரே கணத்தில் நடந்து வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

* * *

rangarajan_bob@hotmail.com


CopyrightThinnai.com

நன்றி : திண்ணை, சங்கர ராம சுப்ரமணியன்

காலமும் குழந்தைகளும் - எஸ்.ரா (Nagulan - Ess Raa)

காலமும் குழந்தைகளும்

நகுலன் தமிழ் நவீன எழுத்தின் முன்னோடிக் கவிஞர். கதையாசிரியர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறார். எண்பது வயது தாண்டிவிட்டது. சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட எந்தப் பரிசையும் பெறாதவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அவரது கதையுலகம் மிகவும் தனித்துவமானது .

எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அக்கதை அவரது வீட்டின் அருகாமையிலிருக்கும் எட்டுவயதுச் சிறுமியைப் பற்றியது. அந்தச் சிறுமி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவள். பெயர் சிமி. அக்குழந்தை ஒரு நாள் நகுலனைத் தேடிவந்து படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்று கேட்டதும் அவர் குஞ்சுண்ணி என்ற மலையாள கவிஞரின் கவிதைதொகுப்பை எடுத்து படிப்பதற்கு கொடுத்தார். குழந்தை வாங்கிப்போய் தன்வீட்டில் வைத்து படித்துவிட்டு வந்து அந்தக்கவிதைகள் தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி அதைத் தானே பாடிக்காட்டியது. நகுலன் அது போல அவளும் எழுதலாம் தானே என்று சொன்னதும், அதற்கென்ன எழுதலாமே என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டது. மறுநாள் அவரைத் தேடி வந்த போது தான் எழுதிய மூன்று கவிதைகளை கொண்டு வந்து கொடுத்து வாசிக்க சொன்னாள் சிமி.அக்கவிதைகள்

சிமி
குமி
உமிக்கரி
*

நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்
*

மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை.


இந்தக் கவிதைகளில் நஞ்சு என்பது சிமியின் தங்கை பெயர். கொடுவாளை அவர்கள் சாப்பிடும் மீன். மணிக்குட்டன் அவளது தம்பி. தன்னுடைய கவிதைகளை பாடிக்காட்டுவிட்டு குழந்தை தன் வீட்டிற்கு ஒடி மறைந்துவிட்டது. அக்கவிதையை கேட்டபோது தான் அடைந்த அனுபவத்தை மிக உயர்வாக நகுலன் எழுதியிருக்கிறார்.

சிமி எழுதிய கவிதைகளும் நவீனகவிதைக்குரிய அம்சங்களோடு தானிருக்கின்றன.புதுக்கவிதையில் பலரிடமும் காணமுடியாத ஏளனமும் அக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இன்னொன்று கவிதைக்கு ஒரு சந்தம் தேவை என்று குழந்தைக்கும் புரிந்திருக்கிறது. அது தனக்குப் பரிச்சயமான உலகைக் கவிதையாக்கியிருக்கிறது.

குஞ்சுண்ணி கவிதைகள் இப்படிதானிருக்கும்
எனக்கொரு பீடி தாருங்கள்
எனக்கொரு தீக்குச்சி தாருங்கள்
அப்படியே
எனக்கொரு உதடு தாருங்கள்


இரண்டு பேரின் கவிதைகளையும் சேர்த்து வாசிக்கும் போது குழந்தையின் கவித்துவம் புரியத்துவங்குகிறது.

தமிழ் கதைகளிலும், சினிமாக்களிலும் குழந்தைகள் தங்கள் இயல்பை மீறி வியாக்யானம் செய்பவர்களாகவே தொடர்ந்து சித்திரிக்கபட்டுவருகிறார். அவர்களது ஆசைகளோ, வெளிப்பாடுகளோ கவனிக்கபடுவதேயில்லை. குழந்தைகளின் மொழியும், கற்பனையும் நவீன ஊடகங்களில் இடம்பெறவேயில்லை. அதிலும் நவீனகதையுலகில் குழந்தைகளுக்கு இடமேயில்லை. தனியாக குழந்தைகளுக்காகவே எழுதப்படும் கதைகளு குறைவே.. பெருநகரங்களில் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதுமில்லை. அப்படியானால் அவர்களின் கற்பனையும் சிந்தனையும் எப்படிதான் வெளிப்படுத்தபடுகின்றன.

எனது பையன் முதல்வகுப்பில் சேர்ந்த நாளில் ஒள என்ற எழுத்திற்கு எதற்காக ஒளவையார் என்ற பாட்டியை காட்டுகிறார்கள். அ என்றால் அம்மா, இ என்றால் இலை என்று சொல்வது புரிகிறது, ஏன் ஒரு பாட்டியை ஒளவையார் என்று சொல்கிறாய்? பாட்டி என்று தானே சொல்லவேண்டும் என்று கேட்டான். நிஜம் தானே, ஒள என்ற எழுத்திற்கு அதைவிட்டால் ஒளடதம் என்ற சொல் இருக்கிறது. அது பெரியவர்களுக்கே பொருள் விளங்க முடியாதது. ஆரம்ப பாடப்புத்தகங்களில் இருந்தே குழந்தைகளின் கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கபட்டுக் கொண்டே வருகின்றது.

சரித்திரப் பாடமொன்றில் ராஜதுரோகம் என்ற சொல் வருகிறது. அதை விளக்கும்படியாக என்னிடம் பையன் கேட்டான். ராஜாவேயில்லாத காலத்தில் எதற்காக ராஜதுரோகத்தைப் பற்றி குழந்தைகள் படிக்கவேண்டும் என்றே புரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள மெட்ரிக்பள்ளிகளில் முறையான பாடப்புத்தகங்கள் கிடையாது. பெரும்பான்மை பாடப்புத்தகங்கள் டெல்லியில் உள்ள பதிப்பகங்கள் வெளியிட்டவை. அதில் உள்ள பெயர்கள், ஊர்கள் யாவும் குழந்தைகளுக்கு கொஞ்சமும் பரிச்சயமற்றவை. அதைப் பெரியவர்கள் புரிந்துகொள்வதற்கே பத்துமுறை வடஇந்தியாவைச் சுற்றியிருக்கவேண்டும். அதைத் தவிரவும் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் மிகவும் அபத்தமாகயிருக்கின்றன. மூன்றாம் வகுப்பு மெட்ரிக் விஞ்ஞான பாடபுத்தகமொன்றில் கேள்விகளே தவறாக அச்சிடப்பட்டுள்ளன. அதை ஆசிரியர் திருத்திச் சொல்லி தருகிறார்களா என்று விசாரித்தவரை அவர்கள் கவனிக்கவேயில்லை என்று தெரியவருகிறது.

குறிப்பாக தமிழ்பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளும், பாடல்களும் குழந்தைகள் தன் வாழ்நாளில் ஒருபோதும் தெரிந்து கொள்ளத் தேவையற்றவை. ஒன்றாம் வகுப்பு பாடத்தில் ஒரு திருக்குறளிருக்கிறது.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

பிறவி என்பது ஒரு பெருங்கடல் என்று நான்குவயதுக் குழந்தை புரிந்துகொண்டுவிட்டால் பிறகு பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பாது. அது போகும் பாதை வேறாகயிருக்கும், குழந்தைகள் திருக்குறள் படிக்கவேண்டும் என்பது சரியானது தான், ஆனால் அவர்கள் எதை முதலில் கற்பது என்று எந்த வரையறுமில்லாமல் இருப்பது சரியில்லை. பாடப்புத்தகங்கள், பயிற்றுமுறைகள் மற்றும் பள்ளியின் கெடுபிடி, வீட்டில் தரப்படும் ஹோம்வொர்க் அத்தனையும் குழந்தையை ஒரு துர்சொப்பனத்தை போல துரத்துகின்றன. அது குறித்து கல்வியாளர்களை விடவும் படைப்பாளர்கள் அதிகம் கவலைப்படவும், மாற்றுமுறைகளை உருவாக்கவும் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவன் நான். இதற்காக குழந்தைகளுக்கான கல்வி குறித்த பல்வேறு திட்டங்களில் சிறப்பு பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறேன். குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்வதும் அதைச் செழுமைப்படுத்துவதும் கவனமாக செய்யபட வேண்டிய வேலைகள்.

இன்றைய சூழலில் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன்வளர்த்தலுக்காக பெற்றோர்கள் பணம் செலவு செய்யத் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் அதற்கான முறையான பயிற்சியகங்களும், பயிற்சி தரும் வல்லுனர்களும் குறைவாகவேயிருக்கிறார்கள்.

குழந்தைகள் படம் என்று கடந்த பத்துவருடத்தில் ஒரு தமிழ்சினிமாவை கூட நான் காணமுடிந்தில்லை. ஹைதராபாத்தில் ஆண்டு தோறும் குழந்தைகளுக்கான உலகத்திரைப்படவிழா நடக்கிறது. அதற்காக மாநிலம் முழுவதுமுள்ள குழந்தைகள் அழைத்துவரப்பட்டு அவர்களில் இருந்தே ஒரு குழு தேர்வாளர்களாகயிருந்து குறும்படங்களைப் பார்த்து பரிசளிக்கிறார்கள். கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாகவே தமிழில் குழந்தைகளுக்கான இலக்கியம், சினிமா, இசை,கவிதை, நாடகம் என எந்தத் துறையையும் நாம் வளர்த்தெடுக்கவில்லை. அதன் பலனை தற்போதுள்ள மாணவர்களிடம் காணமுடிகிறது. அவர்களுக்குப் பரிச்சயமான வெகுஜன ஊடகங்களும், சினிமாவும் தான் தமிழின் கலாச்சார வெளிப்பாடு என்று அவர்கள் நம்புகிறார்கள். எளிதில் அதிலிருந்து சலிப்புற்று விலகிப்போய்விடுகிறார்கள்.

எனது அருகாமை வீட்டில் வேலைபார்க்கும் குடும்பமொன்றிருக்கிறது. அவர்கள் குழந்தைகள் மாலையில் பள்ளிவிட்டு வந்தது முதல் வீடு பூட்டபட்டிருப்பதால் தெருவிலும் அக்கம்பக்கத்து வீடுகளிலும் இரவு எட்டரை மணி வரையிருக்கிறார்கள். பெற்றோர்கள் வந்து சேர்ந்து, அதன் பிறகு அவர்கள் சமையல் செய்து, தொலைக்காட்சி தொடர் பார்த்துவிட்டு உறங்குவதற்குள் பனிரெண்டு மணியாகிவிடுகிறது. காலையில் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புவதற்குத் தாமதமாகவே அடியும் ஏச்சும் பேச்சும் வாங்குகின்றன. அநேகமாக சென்னையில் பெரும்பான்மை வீடுகளின் காலைக்காட்சியிது தான். இந்த நெருக்கடி பழகிய குழந்தைகள் வெகு சீக்கரத்திலே தங்களை அறியாமல் கோபத்திற்கும் பயத்திற்கும் பழகிவிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதை அறிமுகப்படுத்துவது, குழந்தைகள் படிக்கவேண்டியவை எவை என்று பெரியவர்களே தெரிந்து வைத்திருக்கவில்லை. தமிழ் சிறுகதையின் நு¡ற்றாண்டுத் தொடர்ச்சியில் குழந்தைகளின் மனவுலகைச்சித்திரிக்கும் பத்திருபது நல்ல கதைகள் இருக்கின்றன. அவைகளைப் பெரியவர்கள் முதலில் படிக்கவேண்டியது அவசியம். . கு.அழகர்சாமியின் அன்பளிப்பு, கிருஷ்ணன்நம்பியின் கணக்கு , விமலாதித்த மாமல்லனின் கறிவேப்பிலை, கி.ராஜநாராயணனின் கதவு, புதுமைப்பித்தனின் மகாமசானம், பி. எஸ் ராமையாவின் நட்சத்திர குழந்தைகள், வண்ணதாசனின் நிலை, கோணங்கியின் கறுப்பு ரயில், போன்றவை குழந்தைகளின் உலகை மிகுந்த கவனத்தோடு பதிவு செய்த கதைகள்.

குறிப்பாக புதுமைபித்தனின் மகாமசானம் கதையில் வரும் சிறுமி சாலையோரத்தில் சாககிடப்பவனை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு சாலையில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்னொரு பிச்சைக்காரன் அவன் சாகப் போகிறான் என்று சொல்கிறான். அந்தச்சிறுமி சற்றும் யோசிக்காமல் பிச்சைக்காரன் முன்கிடந்த காசை காட்டி அதற்கு பட்டாணி வாங்கி கொடு பிழைத்துக் கொள்வான் என்று சொல்கிறாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் உலகில் பட்டாணி சாப்பிட ஆசைப்படாதவர்களே கிடையாது என்பது தான். குழந்தையின் அப்பா சாலையேரத்தில் என்ன வேடிக்கை பார்க்கிறாய் என்று திட்டியபடியே தான் வாங்கிவந்த மாம்பழத்தை தருகிறார். மாம்பழத்தை நுகர்ந்தபடியே நல்ல வாசனையா இருக்கு என்று குழந்தை சொல்வதோடு கதை முடிகிறது. புதுமைபித்தனின் கதைகளில் வரும் குழந்தைகள் பெரிதும் வாழ்வின் அபத்தத்தை கேலி செய்யக்கூடியவர்களாகயிருக்கிறார்கள்.

இன்னொரு கதை கடவுளும் கந்தசாமி பிள்ளையும். அதில் கடவுளை தன்வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகிறார் கந்தசாமி பிள்ளை. வீட்டினுள் நுழையும் போது கந்தசாமி பிள்ளையின் குழந்தை அப்பா என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்கிறது. அதற்கு அவர் என்னைத்தான் கொண்டு வந்திருக்கிறேன் என்பார். உடனே குழந்தை உன்னைத் தான் எப்போ பார்த்தாலும் கொண்டு வர்றே. ஒரு பொரிகடலையாவது வாங்கிட்டு வரக்கூடாதா என்று கேட்கும். சமாளித்துக்கொண்டு அதான் இந்தத் தாத்தாவை கொண்டுவந்திருக்கிறேன் என்று கடவுளை காட்டுவார். குழந்தையின் கேள்வியால் கந்தசாமி பிள்ளை திணறியது நமக்கு புரிகிறது. அருகிலிருந்த கடவுள் ஏன் மெளனமாக நிற்கிறார். ஒருவேளை கடவுளாகயிருந்தாலும் குழந்தையின் கேள்விக்குப் பதிலற்று அமைதியாக இருக்க வேண்டியது தான் நிலையா ?

வீட்டிற்கு வந்த கடவுளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு குழந்தை பாண்டியாட்டம் ஆடுகிறது. கடவுள் தாவிக் குதிக்கும் போது குழந்தை பரிகாசமான குரலில் தோத்துட்டயா என்று சொல்கிறது. அவர் தனக்கு கோட்டில் காலை வைத்தால் தோற்றுப்போகும் விதி தெரியாது என்கிறார். குழந்தை உடனே ஆட்டம் தெரியாமல் ஆடவரலாமா என்று கேலி செய்கிறது அதைப்பார்த்துக்கொண்டு செய்வதறியாமல் கடவுள் விழித்துக்கொண்டு நின்றிருப்பார். இயலாமையும் அவமானமும் குழந்தைகளுக்கு புரிந்துவிடுமளவு நகரவாழ்வில் வாழ்க்கை சகசமாகியிருக்கிறது என்று புதுமைபித்தன் எழுதியது இன்றுவரை உண்மையாகவேயிருக்கிறது.

நாம் குழந்தைகளைச் சேர்க்கப்போகும் பள்ளி, அதன் சுற்றுப்புறம், வாகனவசதி, மாதக்கட்டணம் போன்றவற்றை பற்றிக் கவலைபடுமளவு அதன் கற்றுக்கொள்ளும் திறன், கற்பனையாற்றல், தோழமை பற்றிக் கவலைப்படுவதில்லை. நம்கவனக்குறைவின் எதிரொலி நாளை நம்மை மட்டுமல்ல. நமது சூழலையும் சேர்த்துப் பாதிக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயிருப்பது தான் அதனினும் தவறென்று படுகிறது.


Thanks to : Ess Raa
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=24&fldrID=1

நகுலன் நாவல்கள் - சன்னாசி (Nagulan Novels)

நகுலன் நாவல்கள்
November 16, 2005
Filed under: பொது — சன்னாசி @ 10:26 pm


நகுலனைப் பற்றி ஏதாவது எழுதிவைக்கவேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்ததுண்டு. சில மாதங்களுக்கு முன்பு காவ்யா வெளியிட்ட நகுலன் நாவல்கள் தொகுதியைப் படித்து முடித்திருந்தேன். புத்தகத்தை மறுபடி உருவிப் பார்த்தால், quotation fetishல் ஊறி மூழ்கி புத்தகம் முழுவதும் கோடு போட்டு வைத்து முதல் பக்கத்தில் பக்க எண்களைக் குறித்து வைத்திருந்ததும் அகப்பட்டது. நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1976), சில அத்தியாயங்கள் (1983), இவர்கள் (1992), வாக்குமூலம் (1992), அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி (2002) என்று எட்டு நாவல்கள் (அல்லது அப்படி நகுலனால் குறிக்கப்பட்டவை). ரங்கநாதன் தெருவில் அப்போது இருந்த முன்றிலில் “வாக்குமூலம்” வாங்கிப் படித்ததுண்டு, அதன்பிறகே நாய்களையும் நவீனன் டைரியையும் படித்திருக்கிறேன். எழுதிய காலவரிசையில் படிப்பது ஒரு இம்சையளிக்கும் விஷயமென்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்; எழுதிய வரிசையைவிட வாசிக்கும் வரிசையே முக்கியமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. இந்த எட்டு நாவல்களும் ஒருவகையில் தனித்தனியாக இருப்பினும், ஒருவகையில் அனைத்தும் ஒன்றே போலவும், வேறு வேறு பெயர்களில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் ஒருவகையில் கலைடாஸ்கோப்புக்குள் திருப்பலுக்கேற்றவாறு நிறங்காட்டும் கண்ணாடித் துகள்கள்போலவும்தான் தோன்றுகிறது. நாவல்களில் வரும் பாத்திரங்களைக் குறித்துச் சுட்டிப் பேசுவதும் அவசியமற்ற ஒன்றாய்த்தான் தோன்றுகிறது.

நகுலனும் அவர் பாத்திரங்களும் குறிப்பிடும் எழுத்தாளர்கள்/தத்துவவாதிகளனைவரும் - விர்ஜினியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், விட்கென்ஸ்டைன் (Wittgenstein), ஹஸ்ஸர்ல் (Edmund Husserl), ஹைடெக்கர் (Martin Heidegger) அனைவருமே ஒருவகையில் இருப்பைக்குறித்துக் கேள்வியெழுப்பியவர்கள்தான். ஓரளவு பொதுவாக எனக்குத் தெரிந்தவரையில் விட்கென்ஸ்டைனைத் திரும்பத் திரும்ப நகுலன் குறிப்பிடுவது, தான் எழுதப்படுவது யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தாலும், விட்கென்ஸ்டைன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சற்று முன்பாக ஜான் லாக் போன்றவர்கள் அலசிய ‘மொழியின் தனித்துவம்’ குறித்த, குறிப்பாக விட்கென்ஸ்டைனின் ‘தனி மொழி’ (Private Language) குறித்த கருத்தாக்கங்களிலிருந்து தன் படைப்புக்களுக்கான ஆதாரங்களைத் தேடவோ, அல்லது ஒரு சாத்தியங்குறைவான சாத்தியத்தில் அக்கருத்தாக்கங்களுக்கான எதிர்-நிர்ணயமாகத் தன் படைப்புக்களை நிறுவவோ முயலுமொரு முயற்சியாகவோதான் தோன்றுகிறது. புனைவைப் படிக்கும் அதே வரிசையற்ற மனோநிலையுடன் இதில் சில சிந்தனைகளைக்குறித்துப் படித்திருந்தாலும், மூலப் புத்தகங்களில் இன்னும் பரிச்சயமுள்ளவர்கள் இதுகுறித்து இன்னும் விளக்கமாக எழுதினால் நன்றாயிருக்கும். நகுலனைப் படித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆர்வமிருப்பின் இந்தத் ‘தனி மொழி’ என்னும் கருத்தாக்கம் சென்ற, செல்லும் திசைகள் குறித்துப் படித்துப்பார்க்க முயல்வதும் நலம். புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன. வாழ்விலிருந்தும், புலனுணர்விலிருந்தும் தங்களுக்கெனப் பிரத்யேகமான சங்கிலித் தொடர்களை உருவாக்கிக்கொண்டு, dialectic என்பதற்கும் narrative என்பதற்குமிடையிலுள்ள இடைவெளி கரைந்து கிடைக்கும் படைப்புக்கள் தமிழில் தத்துவவியல் வழியாகக் கிடைப்பதை/பரிச்சயமாவதைவிட, இதுமாதிரிப் புனைவுகள் வழியாகப் பரிச்சயமாகும்/கிடைக்கும் வாய்ப்புக்கள்தான் அதிகமாயுள்ளது என்பது ஒரு சாதாரண வாசகனாக உணரமுடியும் உண்மை. கிடைக்கும் செருப்புக்கேற்றமாதிரியெல்லாம் காலை வெட்டிக்கொள்வது போல இருக்கிறது இது என்றுதான் படிப்பவர்களுக்குத் தோன்றும்; ஆனால் இதைவிடத் தெளிவாக விளக்க என்னால் முடியவில்லை - இந்த விளக்கமுடியாத் தன்மைக்குக் காரணமும்கூட கிட்டத்தட்ட ‘தனி மொழி’ என்னும் அலசல்வழிக் கூறப்படும் “ஒரு மொழியின் பிரத்யேகத்தன்மைக்கு” எதிராகக் கூறப்படும் வாதங்களில் காணப்படும் ஓரளவான உண்மையாகவும் இருக்கலாம். தனிப்பட்ட ஒரு நபரின் மொழி அந்த நபருக்கு மட்டுமே பிரத்யேகமானதாயிருப்பின், அந்தப் பிரத்யேகமும் வெகு துல்லியமான பிரத்யேகமாயிருப்பின், மொழி என்றவொரு வகைப்பாட்டுக்குள் வரும் தகுதியையே அந்தப் “பிரத்யேக மொழி” இழந்துவிடுகிறது என்று கூறப்படுகிறது. அத் தகுதியை இழக்கக் கூறப்படும் காரணங்களிலொன்று அம்மொழியின் “பரிமாற்ற இன்மை”. பரிமாறிக்கொள்ளப்படுவதே மொழி என்ற நிர்ணயங்களிருக்கையில், தனிப்பட்ட ஒரு நபருக்குமட்டும் பிரத்யேகமாயிருக்கும் மொழி எவரைநோக்கிப் பேசப்படும், தன்னைநோக்கியே பேசப்படவேண்டுமெனில் பிறகு “தான்”னின் உபயோகம் என்ன, பின்பு அந்த மொழியின் உபயோகம் என்ன என்ற ரீதியில் விரிந்துகொண்டுபோகும் வாதங்களின் பின் புதைந்திருக்கும் காரணம், எழுத்து மொழியைவிட பேச்சு மொழிக்கு (குறைந்தபட்சம் மேற்கத்திய உலகத்திலாவது) கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவத்தின் அடிப்படையாகவே அமைகிறது. குரல் என்பதைப் பிரத்யேகப்படுத்தத் தேவையான குறைந்தபட்ச பொதுப்படைத்தன்மையின் அதே அளவை எழுத்தில் பொருத்திப் பார்ப்பது சிரமம் என்றே இருக்கையில், வெளிப்பாட்டு முறை என்பதே உணர்த்தமுடிவது/உணர்த்தமுடியாதது என்று குறுகிவிட்ட தருணத்தில், எழுத்து, ஓவியம், சிற்பம், இசை அனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளிலும் பொருந்துவதை உணரமுடியும் மனம் அடையும் குழப்ப நிலைதான் திரும்பத் திரும்ப நகுலனின் ஒவ்வொரு நாவலிலும், மனிதர்களிலும் அவர்களது இயக்கங்களிலும், இடைவெளியின்றி நெருக்கமாகத் திணித்து அடைக்கப்பட்ட ஊறுகாய் ஜாடி போல, கவிழ்த்தாலும் கொட்டாத ஊறுகாய்கள் போல ஒருவகையில் உறைந்தும், ஒருவகையில் கையில் சிக்காத நெகிழ்ச்சியுடனும் நம்மை எதிர்கொள்கிறது. பரிமாற்றத்துக்கு மொழி எடுத்துக்கொண்ட உபகரணமான “சம்பவங்களை” உபகரணமாகவே உபயோகிக்க விருப்பமற்று, அதைப் பொடித்துக் கலைத்து, எங்கே சென்றாலும் உணரமுடியும் காற்று போலப் பொதுவில் பரவவிட்டுவிடுகிறது. பொதுவாகப் பரவவிட்டிருப்பதனாலேயே, ஒரு கட்டமைப்புக்குள் சிக்காததனாலேயே அது முக்கியத்துவமற்றதாக இருக்கக்கூடும் என்று கூச்சல்கள் எழுவது காலத்தின் கட்டாயம். அந்தக் கூச்சலையும் எதிர்பார்த்துப் பதட்டமடைவதை, ஜேஜே சில குறிப்புக்கள் வருவதற்கு முந்தைய (என்று நினைக்கிறேன்) காலகட்டத்திலேயே வந்த நிழல்கள், நினைவுப் பாதை, நாய்கள் மூன்றிலும் உணரமுடிகிறது. திரும்பத் திரும்ப சுசீலா சுசீலா என்று அரற்றுகிறார் நகுலன்/நவீனன்/இன்னும் பலர். தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனா நகுலனை/நவீனனை வசீகரிப்பதைவிட, தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனாவின் பைத்திய நிலைதான் இன்னும் நகுலனை வசீகரிக்கிறது, தன்னையே அந்தப் பைத்தியத்தினிடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறார். தொடர்ந்து மனிதர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனிதர்கள் மூச்சுத்திணற வைக்காத நேரத்தில் ஊறுகாய் ஜாடிக்குள் அவர்களின் மனவோட்டங்கள் நிரம்பி மேலும் மூச்சுத்திணற வைக்கின்றன.

“நவீனன் ஒரு எழுத்தாளன் - நகுலன் ஒரு மனிதனின் புனைப்பெயர்”(பக்.280)

என்று நாய்கள் நாவலில் வரும் வாக்கியத்தின் சாரமே கிட்டத்தட்ட அனைத்துப் புத்தகங்களிலும் விரிகிறது. “இப்பொழுது மனம் “சுசீலா, சுசீலா” என்று மனனம் செய்வதைப் போல் அப்போது ஒரு சக மாணவனைச் சுற்றி அலைந்தது” (பக்.80), “எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்துகொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்” (பக்.68, நினைவுப்பாதை) என்று தன்னையும், தான் விரும்புபவற்றையும் “சுசீலா நான் உருட்டும் ஜபமாலை, நான் கண்ட தெய்வம்” (பக்.417, நவீனன் டைரி) என்று ஜபம் செய்து தன் விருப்பத்திற்கேற்றபடி அலங்கரித்து அலங்காரம்நீக்கி அலங்கரித்து அலங்காரம்நீக்குவதிலுள்ள அவஸ்தையை எழுத்தில் பதிவு செய்வதென்பதும் சாதாரணமல்ல, அதைப் படிப்பவன் உணரவேண்டுமே என்பதற்காக சமாதானங்கள், நகாசுகள் செய்யமுடியாமல் போவதிலுள்ள அவஸ்தையைச் சொல்லாமல் சொல்லமுடிவதும் சாதாரண விஷயமல்ல. ஜெயகாந்தன், சு.ரா போன்ற அவரது காலத்தைய எழுத்தாளர்களை இடித்து எழுதுவதும், நானூறு பக்கம்கூட எழுதாவிட்டால் என்ன நாவல் அது என்று கிண்டலடித்துக் கொள்வதுமென்று பல்வேறு தருணங்கள் புத்தகத்தினுள் இருப்பினும், அதை அரசியலாக, வம்புப்பேச்சாகப் பார்க்கமுடியாதது புத்தகத்தின் பிற பக்கங்களில் வழியும் துல்லியமான மன அவசத்தினால்தானென்று தோன்றுகிறது. நேரடியாக எதுவும் நகுலன் குறித்து எனக்குத் தெரிந்திராவிட்டாலும், “ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பத்துத் தரம் திருத்தி எழுது” என்ற ரீதியில் இந்த நாவலின் பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருக்குமென்று தோன்றவில்லை - எழுதப்பட்ட பக்கங்களை எந்த வரிசையிலும் மாற்றி அடுக்கிப் படித்துக்கொள்ளமுடிவது இலக்கியத்தை ஸ்பார்க்நோட்ஸ் மூலம் படிப்பதுபோலில்லையா என்று கேட்டுக்கொள்ளத் தோன்றினாலும், பாரதியைப்பற்றி “அவன் என்ன எழுதினாலும் அதற்குள் மரபு வந்து விழுகிறது” என்று நகுலன் கூறுவதைத்தான் என்னளவிலும் நகுலனைக்குறித்துச் சொல்லத் தோன்றுகிறது. இந்த நாவல்களின் பாத்திரங்களின் மனோபாவம் அசல் “தமிழ் மனத்துக்குச்” சாத்தியமா என்று கேட்டுப் பார்த்தால், சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. நோய்வசப்படுத்திவிடும் அசட்டை, அதனால் விளையும் வெறுமை, இப்படி விளையும் வெறுமை கொணரும் மகிழ்ச்சி, இப்படி விளையும் மகிழ்ச்சி தரும் நிமிஷநேர ஆசுவாசம், இப்படி விளையும் ஆசுவாசம் திரும்ப உருவியெடுத்துக்கொள்ளப்படும்போது ஊறும் அசல் வெறுமை, இது எதையும் உணராத/உணர்வதை உணர்த்தமுடியாத சூழல் இவற்றோடு சாய்ந்து ஓய்வெடுக்கும் கயிற்றுக் கட்டில்கள் என விரியும் வாழ்வின் ஒரு வலிய வட்டத்தின் அசல் ரூபத்தை நகுலனின் நாவல்களில், சிறுகதைகளில், சில கவிதைகளில் அடையமுடிந்ததுபோல படிக்கக் கிடைத்த வேறு பல தமிழ் எழுத்துக்களில் காணமுடிந்ததில்லை என்பது என்னளவிலான ஒரு அனுபவம்.

“உருவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு தன்மையைத் தெரிவிக்க முடியுமா? எழுதுகின்ற நிர்ப்பந்தம் என்பது பார்க்கப்போனால் பேசுவதின் நிர்ப்பந்தத்தின் வேற்றுருவம் தானோ? ஆனால் எவ்வளவு பேர் எதைப்பற்றிப் பேசுகிறார்கள்? - பேசினாலும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்? - பேசவேண்டும் என்பதன் நிர்ப்பந்தம்தான் என்ன? சிந்தனையின் தனிமையிலிருந்து விடுபட ஒரு முயற்சி? நடக்கலாம், பேசலாம், தின்னலாம், படுத்துக்கொள்ளலாம், பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் - இதெல்லாம் எதற்காக? இதைவிடப் பேசாமல் உட்கார்ந்து டயரி எழுதுவது நல்லதில்லையா, இகரமுதல்வி? வார்த்தைகளின் சப்தங்கள் எழுதும் எழுத்துக்களால் எவ்வாறு உருவாகின்றன? அகர முதல எழுத்தெல்லாம் - ஆரூட ஞானம் - நடைபாதை - தக்ளியில் நூல் நூற்பது மாதிரி - ஜபமாலை உருட்டுவது மாதிரி - “ (பக். 418, நவீனன் டைரி)

என்று தொடர்ந்து, “தனக்குத்தானே தான் இருக்கிறோமா என்று எப்பொழுதும் சந்தேகப்படும் டி.கே.துரைசாமி” (பக்.419, நவீனன் டைரி) என்னும் வாக்கியங்களில் “இருப்பைக் கேள்விக்குட்படுத்துதல்” என்ற தேய்பதத்தைத் தாண்டியும் தெரியும் புதிரை, புதிரின் விடைதெரியாத்தன்மை அளிக்கும் ஆசுவாசத்தை உணர்வது எளிதான ஒன்றாய்த்தானிருக்கிறது.

என்ன சொல்ல வர்றாரு டைரக்டர் என்ற கேள்விக்கும், பொறுமையாகப் படித்துப் பார்த்தால் ஒரு பதில் இருக்கிறது:

“அது சரி. நான் உன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கச் சுவையாக இருக்கிறது என்பதைத் தவிர ‘எல்லாம் எதற்கு’ என்றுதான் எனக்கும் கேட்கத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளன், ஒரு கவிஞன், இன்னொரு எழுத்தாளன், யாரோ ஒரு சச்சிதானந்தம் பிள்ளை, இவர்கள் மாறிமாறி வருவதும் பேசுவதையும் தவிர வேறொன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே. ஒரு பாத்திரத்தைப் பார்த்தால் அந்தப் பாத்திரம் கூட நான் தானோ என்று தோன்றுகிறது”.

“என்ன செய்வது. பார்க்கிறோம், பேசுகிறோம்; சிந்திக்கிறோம் கனவு காண்கிறோம், நாகரிகம் வளர வளர, நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பிணைந்திருப்பதைப்போல இப்பொழுது முடியாது. ஸைமன் வீல்”

இதே ரீதியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு போகிறார்:

“நண்பா, எழுத்து என்பது சுக்கிலத் துளியோ சுரோணிதமோ இல்லை; படைப்பாளி அப்படிச் சொன்னாலும் அவை உயிரின் பீஜங்களுமல்ல; அவைகளிலிருந்து உதிப்பவை, விமர்சகர்கள் அப்படிச் சொன்னாலும், உயிருள்ள மனிதர்கள் இல்லை; பேப்பர் வெண்மை; மைக் கறுப்பு; இவை மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள்; இவ்வளவுதான் நண்பா” (பக்.287, நாய்கள்)

என்று மௌனியின் பிரபலமான “எவரின் நடமாடும் நிழல்கள் நாம்” மை புனைவின் பாத்திரங்களுக்கும் பொருத்துகிறார்.

ஆகாயம் சாம்பல் நிறம்
அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம் என்று மரணங்குறித்த சிந்தனைகளடுத்து நவீனனிடமிருந்து உதிருமொரு கவிதை (பக்.379, நவீனன் டைரி) கூட, மரணம் என்பதையும் தாண்டி, நினைவுகளிலிருந்து விடுபடமுடியாத சாபத்தைக்குறித்த ஒரு அடக்கப்பட்ட வசையாகத்தான் தோன்றுகிறது. எது எழுத்தை வசீகரமாக்குகிறது, ஏன், எது எதையுமே வசீகரமாக்குகிறதென்ற ஒரு விஷயத்தைப் புனைவில் எழுதமுயல்கையில் நாம் கற்பனைசெய்யக்கூடிய வார்த்தைப் பிரவாகங்களனைத்தையும் ஒரு சில சொற்கள் மூலமாக, நேரடியாகச் சொல்லாமல் தத்துவ மழை பொழியாமல் ஒரு சொடுக்கில் உணர்த்திவிட முடிவது, ‘அவன்’ மற்றும் ‘அவன்’னுக்கிடையான விளையாட்டுப்பொன்ற உரையாடலில் சாத்தியமாயிருக்கும்.

அவன்: அவ ஒரு நாள் சொன்னா “மணிப் பெரிப்பா நமோஸ்துதே”
அவன்: அவ்வளவுக்கு உயர்ந்துட்டயாக்கும்.
அவன்: அப்படி இல்லேடா - வார்த்தைகள் என்னை வசீகரிக்கின்றன” (பக்.471, நவீனன் டைரி)

தான் எழுதுவதைவிட்டு எழுத்தாளன் எவ்வளவு தூரம் விலகியிருக்கமுடியும், அப்படி விலகியிருந்தும் எவ்வளவு நெகிழ்ச்சியை எழுத்துக்குள் செலுத்தமுடியுமென்று என்னாலாவது குறைந்தபட்சம் உணரமுடிந்த அபாரமானதொரு தருணம் இது. இங்கே அவற்றைச் சுட்டுவதில் வாசிப்பவர்களுக்கு என்ன அனுபவம் கிடைக்குமென்று தெரியவில்லை, ஆனால் புத்தகத்தை வாசிக்கையில் ஏதேனுமொரு பொறியேனும் கிளம்பக்கூடும். ஒரு சின்னக் குறிப்பு, பிணம் கூடத் திசைதவறமுடியுமென்று உணர்த்துகிறது:

17.9.73 - நேற்றுச் சிவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் சிவன் “கரமணையில் - இல்லையில்லை பூஜைப் புரையில் சில பிராமணர்கள் பாலத்தையும் தாண்டிப் பிணத்தை எடுத்துக்கொண்டுபோவதைப் பார்த்தேன் - எனக்கு ஆச்சரியமாயிருந்தது (பிணத்தைக் கொண்டு போவதில்கூட ஒரு மரியாதை வேண்டாமா?) ஏனென்றால் அவர்கள் மயானத்தையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள். பிறகு யாரோ அவர்கள் பின்னே ஓடிப்போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.” (பக்.530, நவீனன் டைரி).

பிணத்தின் திசையைக்கூடச் சுமந்துசெல்பவர்கள் சிதைத்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணர்கையில் அதையே புத்தகங்களுக்கும் பொருத்திப்பார்க்கத் தோன்றுவது மிகவும் அசௌகரியமாகத்தானிருக்கிறது, இருந்தாலும் அவையும் நிகழ்ந்துதானே தீரவேண்டும்? ;-)

நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

http://dystocia.weblogs.us/archives/182

நன்றி: சன்னாசி

நகுலன் கவிதைகள் - விகடன் (Nagulan Kavithaigal)

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!



http://www.vikatan.com/av/2007/jan/03012007/av0901.asp