Saturday, January 27, 2007

காலமும் குழந்தைகளும் - எஸ்.ரா (Nagulan - Ess Raa)

காலமும் குழந்தைகளும்

நகுலன் தமிழ் நவீன எழுத்தின் முன்னோடிக் கவிஞர். கதையாசிரியர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறார். எண்பது வயது தாண்டிவிட்டது. சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட எந்தப் பரிசையும் பெறாதவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அவரது கதையுலகம் மிகவும் தனித்துவமானது .

எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அக்கதை அவரது வீட்டின் அருகாமையிலிருக்கும் எட்டுவயதுச் சிறுமியைப் பற்றியது. அந்தச் சிறுமி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவள். பெயர் சிமி. அக்குழந்தை ஒரு நாள் நகுலனைத் தேடிவந்து படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்று கேட்டதும் அவர் குஞ்சுண்ணி என்ற மலையாள கவிஞரின் கவிதைதொகுப்பை எடுத்து படிப்பதற்கு கொடுத்தார். குழந்தை வாங்கிப்போய் தன்வீட்டில் வைத்து படித்துவிட்டு வந்து அந்தக்கவிதைகள் தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி அதைத் தானே பாடிக்காட்டியது. நகுலன் அது போல அவளும் எழுதலாம் தானே என்று சொன்னதும், அதற்கென்ன எழுதலாமே என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டது. மறுநாள் அவரைத் தேடி வந்த போது தான் எழுதிய மூன்று கவிதைகளை கொண்டு வந்து கொடுத்து வாசிக்க சொன்னாள் சிமி.அக்கவிதைகள்

சிமி
குமி
உமிக்கரி
*

நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்
*

மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை.


இந்தக் கவிதைகளில் நஞ்சு என்பது சிமியின் தங்கை பெயர். கொடுவாளை அவர்கள் சாப்பிடும் மீன். மணிக்குட்டன் அவளது தம்பி. தன்னுடைய கவிதைகளை பாடிக்காட்டுவிட்டு குழந்தை தன் வீட்டிற்கு ஒடி மறைந்துவிட்டது. அக்கவிதையை கேட்டபோது தான் அடைந்த அனுபவத்தை மிக உயர்வாக நகுலன் எழுதியிருக்கிறார்.

சிமி எழுதிய கவிதைகளும் நவீனகவிதைக்குரிய அம்சங்களோடு தானிருக்கின்றன.புதுக்கவிதையில் பலரிடமும் காணமுடியாத ஏளனமும் அக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இன்னொன்று கவிதைக்கு ஒரு சந்தம் தேவை என்று குழந்தைக்கும் புரிந்திருக்கிறது. அது தனக்குப் பரிச்சயமான உலகைக் கவிதையாக்கியிருக்கிறது.

குஞ்சுண்ணி கவிதைகள் இப்படிதானிருக்கும்
எனக்கொரு பீடி தாருங்கள்
எனக்கொரு தீக்குச்சி தாருங்கள்
அப்படியே
எனக்கொரு உதடு தாருங்கள்


இரண்டு பேரின் கவிதைகளையும் சேர்த்து வாசிக்கும் போது குழந்தையின் கவித்துவம் புரியத்துவங்குகிறது.

தமிழ் கதைகளிலும், சினிமாக்களிலும் குழந்தைகள் தங்கள் இயல்பை மீறி வியாக்யானம் செய்பவர்களாகவே தொடர்ந்து சித்திரிக்கபட்டுவருகிறார். அவர்களது ஆசைகளோ, வெளிப்பாடுகளோ கவனிக்கபடுவதேயில்லை. குழந்தைகளின் மொழியும், கற்பனையும் நவீன ஊடகங்களில் இடம்பெறவேயில்லை. அதிலும் நவீனகதையுலகில் குழந்தைகளுக்கு இடமேயில்லை. தனியாக குழந்தைகளுக்காகவே எழுதப்படும் கதைகளு குறைவே.. பெருநகரங்களில் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதுமில்லை. அப்படியானால் அவர்களின் கற்பனையும் சிந்தனையும் எப்படிதான் வெளிப்படுத்தபடுகின்றன.

எனது பையன் முதல்வகுப்பில் சேர்ந்த நாளில் ஒள என்ற எழுத்திற்கு எதற்காக ஒளவையார் என்ற பாட்டியை காட்டுகிறார்கள். அ என்றால் அம்மா, இ என்றால் இலை என்று சொல்வது புரிகிறது, ஏன் ஒரு பாட்டியை ஒளவையார் என்று சொல்கிறாய்? பாட்டி என்று தானே சொல்லவேண்டும் என்று கேட்டான். நிஜம் தானே, ஒள என்ற எழுத்திற்கு அதைவிட்டால் ஒளடதம் என்ற சொல் இருக்கிறது. அது பெரியவர்களுக்கே பொருள் விளங்க முடியாதது. ஆரம்ப பாடப்புத்தகங்களில் இருந்தே குழந்தைகளின் கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கபட்டுக் கொண்டே வருகின்றது.

சரித்திரப் பாடமொன்றில் ராஜதுரோகம் என்ற சொல் வருகிறது. அதை விளக்கும்படியாக என்னிடம் பையன் கேட்டான். ராஜாவேயில்லாத காலத்தில் எதற்காக ராஜதுரோகத்தைப் பற்றி குழந்தைகள் படிக்கவேண்டும் என்றே புரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள மெட்ரிக்பள்ளிகளில் முறையான பாடப்புத்தகங்கள் கிடையாது. பெரும்பான்மை பாடப்புத்தகங்கள் டெல்லியில் உள்ள பதிப்பகங்கள் வெளியிட்டவை. அதில் உள்ள பெயர்கள், ஊர்கள் யாவும் குழந்தைகளுக்கு கொஞ்சமும் பரிச்சயமற்றவை. அதைப் பெரியவர்கள் புரிந்துகொள்வதற்கே பத்துமுறை வடஇந்தியாவைச் சுற்றியிருக்கவேண்டும். அதைத் தவிரவும் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் மிகவும் அபத்தமாகயிருக்கின்றன. மூன்றாம் வகுப்பு மெட்ரிக் விஞ்ஞான பாடபுத்தகமொன்றில் கேள்விகளே தவறாக அச்சிடப்பட்டுள்ளன. அதை ஆசிரியர் திருத்திச் சொல்லி தருகிறார்களா என்று விசாரித்தவரை அவர்கள் கவனிக்கவேயில்லை என்று தெரியவருகிறது.

குறிப்பாக தமிழ்பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளும், பாடல்களும் குழந்தைகள் தன் வாழ்நாளில் ஒருபோதும் தெரிந்து கொள்ளத் தேவையற்றவை. ஒன்றாம் வகுப்பு பாடத்தில் ஒரு திருக்குறளிருக்கிறது.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

பிறவி என்பது ஒரு பெருங்கடல் என்று நான்குவயதுக் குழந்தை புரிந்துகொண்டுவிட்டால் பிறகு பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பாது. அது போகும் பாதை வேறாகயிருக்கும், குழந்தைகள் திருக்குறள் படிக்கவேண்டும் என்பது சரியானது தான், ஆனால் அவர்கள் எதை முதலில் கற்பது என்று எந்த வரையறுமில்லாமல் இருப்பது சரியில்லை. பாடப்புத்தகங்கள், பயிற்றுமுறைகள் மற்றும் பள்ளியின் கெடுபிடி, வீட்டில் தரப்படும் ஹோம்வொர்க் அத்தனையும் குழந்தையை ஒரு துர்சொப்பனத்தை போல துரத்துகின்றன. அது குறித்து கல்வியாளர்களை விடவும் படைப்பாளர்கள் அதிகம் கவலைப்படவும், மாற்றுமுறைகளை உருவாக்கவும் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவன் நான். இதற்காக குழந்தைகளுக்கான கல்வி குறித்த பல்வேறு திட்டங்களில் சிறப்பு பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறேன். குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்வதும் அதைச் செழுமைப்படுத்துவதும் கவனமாக செய்யபட வேண்டிய வேலைகள்.

இன்றைய சூழலில் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன்வளர்த்தலுக்காக பெற்றோர்கள் பணம் செலவு செய்யத் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் அதற்கான முறையான பயிற்சியகங்களும், பயிற்சி தரும் வல்லுனர்களும் குறைவாகவேயிருக்கிறார்கள்.

குழந்தைகள் படம் என்று கடந்த பத்துவருடத்தில் ஒரு தமிழ்சினிமாவை கூட நான் காணமுடிந்தில்லை. ஹைதராபாத்தில் ஆண்டு தோறும் குழந்தைகளுக்கான உலகத்திரைப்படவிழா நடக்கிறது. அதற்காக மாநிலம் முழுவதுமுள்ள குழந்தைகள் அழைத்துவரப்பட்டு அவர்களில் இருந்தே ஒரு குழு தேர்வாளர்களாகயிருந்து குறும்படங்களைப் பார்த்து பரிசளிக்கிறார்கள். கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாகவே தமிழில் குழந்தைகளுக்கான இலக்கியம், சினிமா, இசை,கவிதை, நாடகம் என எந்தத் துறையையும் நாம் வளர்த்தெடுக்கவில்லை. அதன் பலனை தற்போதுள்ள மாணவர்களிடம் காணமுடிகிறது. அவர்களுக்குப் பரிச்சயமான வெகுஜன ஊடகங்களும், சினிமாவும் தான் தமிழின் கலாச்சார வெளிப்பாடு என்று அவர்கள் நம்புகிறார்கள். எளிதில் அதிலிருந்து சலிப்புற்று விலகிப்போய்விடுகிறார்கள்.

எனது அருகாமை வீட்டில் வேலைபார்க்கும் குடும்பமொன்றிருக்கிறது. அவர்கள் குழந்தைகள் மாலையில் பள்ளிவிட்டு வந்தது முதல் வீடு பூட்டபட்டிருப்பதால் தெருவிலும் அக்கம்பக்கத்து வீடுகளிலும் இரவு எட்டரை மணி வரையிருக்கிறார்கள். பெற்றோர்கள் வந்து சேர்ந்து, அதன் பிறகு அவர்கள் சமையல் செய்து, தொலைக்காட்சி தொடர் பார்த்துவிட்டு உறங்குவதற்குள் பனிரெண்டு மணியாகிவிடுகிறது. காலையில் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புவதற்குத் தாமதமாகவே அடியும் ஏச்சும் பேச்சும் வாங்குகின்றன. அநேகமாக சென்னையில் பெரும்பான்மை வீடுகளின் காலைக்காட்சியிது தான். இந்த நெருக்கடி பழகிய குழந்தைகள் வெகு சீக்கரத்திலே தங்களை அறியாமல் கோபத்திற்கும் பயத்திற்கும் பழகிவிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதை அறிமுகப்படுத்துவது, குழந்தைகள் படிக்கவேண்டியவை எவை என்று பெரியவர்களே தெரிந்து வைத்திருக்கவில்லை. தமிழ் சிறுகதையின் நு¡ற்றாண்டுத் தொடர்ச்சியில் குழந்தைகளின் மனவுலகைச்சித்திரிக்கும் பத்திருபது நல்ல கதைகள் இருக்கின்றன. அவைகளைப் பெரியவர்கள் முதலில் படிக்கவேண்டியது அவசியம். . கு.அழகர்சாமியின் அன்பளிப்பு, கிருஷ்ணன்நம்பியின் கணக்கு , விமலாதித்த மாமல்லனின் கறிவேப்பிலை, கி.ராஜநாராயணனின் கதவு, புதுமைப்பித்தனின் மகாமசானம், பி. எஸ் ராமையாவின் நட்சத்திர குழந்தைகள், வண்ணதாசனின் நிலை, கோணங்கியின் கறுப்பு ரயில், போன்றவை குழந்தைகளின் உலகை மிகுந்த கவனத்தோடு பதிவு செய்த கதைகள்.

குறிப்பாக புதுமைபித்தனின் மகாமசானம் கதையில் வரும் சிறுமி சாலையோரத்தில் சாககிடப்பவனை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு சாலையில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்னொரு பிச்சைக்காரன் அவன் சாகப் போகிறான் என்று சொல்கிறான். அந்தச்சிறுமி சற்றும் யோசிக்காமல் பிச்சைக்காரன் முன்கிடந்த காசை காட்டி அதற்கு பட்டாணி வாங்கி கொடு பிழைத்துக் கொள்வான் என்று சொல்கிறாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் உலகில் பட்டாணி சாப்பிட ஆசைப்படாதவர்களே கிடையாது என்பது தான். குழந்தையின் அப்பா சாலையேரத்தில் என்ன வேடிக்கை பார்க்கிறாய் என்று திட்டியபடியே தான் வாங்கிவந்த மாம்பழத்தை தருகிறார். மாம்பழத்தை நுகர்ந்தபடியே நல்ல வாசனையா இருக்கு என்று குழந்தை சொல்வதோடு கதை முடிகிறது. புதுமைபித்தனின் கதைகளில் வரும் குழந்தைகள் பெரிதும் வாழ்வின் அபத்தத்தை கேலி செய்யக்கூடியவர்களாகயிருக்கிறார்கள்.

இன்னொரு கதை கடவுளும் கந்தசாமி பிள்ளையும். அதில் கடவுளை தன்வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகிறார் கந்தசாமி பிள்ளை. வீட்டினுள் நுழையும் போது கந்தசாமி பிள்ளையின் குழந்தை அப்பா என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்கிறது. அதற்கு அவர் என்னைத்தான் கொண்டு வந்திருக்கிறேன் என்பார். உடனே குழந்தை உன்னைத் தான் எப்போ பார்த்தாலும் கொண்டு வர்றே. ஒரு பொரிகடலையாவது வாங்கிட்டு வரக்கூடாதா என்று கேட்கும். சமாளித்துக்கொண்டு அதான் இந்தத் தாத்தாவை கொண்டுவந்திருக்கிறேன் என்று கடவுளை காட்டுவார். குழந்தையின் கேள்வியால் கந்தசாமி பிள்ளை திணறியது நமக்கு புரிகிறது. அருகிலிருந்த கடவுள் ஏன் மெளனமாக நிற்கிறார். ஒருவேளை கடவுளாகயிருந்தாலும் குழந்தையின் கேள்விக்குப் பதிலற்று அமைதியாக இருக்க வேண்டியது தான் நிலையா ?

வீட்டிற்கு வந்த கடவுளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு குழந்தை பாண்டியாட்டம் ஆடுகிறது. கடவுள் தாவிக் குதிக்கும் போது குழந்தை பரிகாசமான குரலில் தோத்துட்டயா என்று சொல்கிறது. அவர் தனக்கு கோட்டில் காலை வைத்தால் தோற்றுப்போகும் விதி தெரியாது என்கிறார். குழந்தை உடனே ஆட்டம் தெரியாமல் ஆடவரலாமா என்று கேலி செய்கிறது அதைப்பார்த்துக்கொண்டு செய்வதறியாமல் கடவுள் விழித்துக்கொண்டு நின்றிருப்பார். இயலாமையும் அவமானமும் குழந்தைகளுக்கு புரிந்துவிடுமளவு நகரவாழ்வில் வாழ்க்கை சகசமாகியிருக்கிறது என்று புதுமைபித்தன் எழுதியது இன்றுவரை உண்மையாகவேயிருக்கிறது.

நாம் குழந்தைகளைச் சேர்க்கப்போகும் பள்ளி, அதன் சுற்றுப்புறம், வாகனவசதி, மாதக்கட்டணம் போன்றவற்றை பற்றிக் கவலைபடுமளவு அதன் கற்றுக்கொள்ளும் திறன், கற்பனையாற்றல், தோழமை பற்றிக் கவலைப்படுவதில்லை. நம்கவனக்குறைவின் எதிரொலி நாளை நம்மை மட்டுமல்ல. நமது சூழலையும் சேர்த்துப் பாதிக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயிருப்பது தான் அதனினும் தவறென்று படுகிறது.


Thanks to : Ess Raa
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=24&fldrID=1

0 Comments:

Post a Comment

<< Home